அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அண்ணாமலை அள்ளி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தக் கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் இளங்கோ தன் அண்ணன் விஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அவருடைய அனுமதியின்றி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது விஸ்வநாதனின் மகள் நிஷா தன் சித்தப்பா இளங்கோவிடம் எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இனி தேங்காய் பறிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதையும் மீறி இளங்கோ தேங்காய் பறித்ததால் நிஷா அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ அண்ணன் மகள் என்று பாராமல் அரை நிர்வாணமாக நின்று நிஷாவிடம் ஆபாசமாக பேசியதோடு, அரிவாளுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனை வீடியோ பதிவுசெய்த நிஷா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை மேற்கொண்டு இளங்கோவை கைது செய்தார். இதற்கிடையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இந்த ஆபாச பேச்சு மற்றும் அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.