கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் பி.டெக் பட்டதாரியான அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டல வளாகத்தில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் வேலை முடித்து வீட்டிற்கு போவதற்காக தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அர்ஜூன் மீது பலமாக மோதிவிட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அர்ஜூனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய பெருங்களத்தூர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது விபத்தில் இறந்த அர்ஜுனின் கையில் இருந்த பை பறந்து சென்று விழுவதும், அதனை போக்குவரத்து ஊழியர் ஆட்டோவில் வைப்பதும் பதிவாகியுள்ளது. அதன்பின் சற்றும் இரக்கமின்றி மர்ம நபர் ஒருவர் அந்தப்பையை தூக்கி செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.