தனியார் கம்பெனி இன்ஜினியரிடம் மடிக்கணினி பரிசு விழுந்ததாக கூறி 4 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திகிரி பகுதியில் சுந்தர் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுந்தர் ஸ்ரீ ராமின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அந்த அழைப்பில் பேசிய நபர் சுந்தர் ஸ்ரீ ராமிற்கு மடிக்கணினி பரிசாக கிடைத்துள்ளது எனவும், சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவற்றை செலுத்திவிட்டு அதனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஸ்ரீ ராம் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால் அந்த நபர் பணம் வரவில்லை எனக்கூறி இரண்டாவது முறையாக பணத்தை அனுப்புமாறு தெரிவித்ததால் சுந்தர் மீண்டும் பணத்தை செலுத்தியுள்ளார். இதனையடுத்து தனது வங்கிக் கணக்கை பார்த்தபோது 4 லட்சத்து 18 ஆயிரத்து 567 ரூபாய் அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு சென்றதை அறிந்து சுந்தர் ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ஸ்ரீராம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.