Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே செஞ்சு தாங்க… பொது மக்களின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சங்கத்தினர் இணைந்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், கோவில் நிர்வாகத்தினர் தர்மகர்த்தா ராஜ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் விளையாட்டு அரங்கம் அருகில் காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது எனவும் அந்தப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் வடிகால் அமைப்பதற்காக குழிதோண்டி அதனை முழுமையாக முடிக்காமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு அமைந்துள்ள கோவில் முன் பகுதியில் அமைந்துள்ள கோபுரம்  மண்ணரிப்பு ஏற்பட்டதால் அது இடிந்து விழுந்து விட்டது. இதனால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனவே கோவில் கோபுரத்தின்  முகப்பு பகுதியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்றும் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழியின் பணியை விரைவாக முடித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கோவிலின் முகப்பு மற்றும் வடிகாலுக்குகாக தோண்டப்பட்ட குழியின் பணியினை விரைவாக செய்து கொடுக்கின்றோம் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |