தபால் நிலையத்தில் பட்டப்பகலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலாராணி வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தான் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக அடகு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலாராணி அடகு வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை மீட்டு கொண்டு தனது பர்சில் வைத்து அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த தபால் நிலையத்தில் கலாராணி பர்சை அங்குள்ள மேஜையின் மீது வைத்துவிட்டு பணம் கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அதன்பிறகு அந்த படிவத்தை தபால் நிலையத்தில் செலுத்திவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பர்சையை மர்ம நபர் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கலாராணி அழுதுகொண்டே காவல் நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்கு சென்ற போது தபால் நிலைய வாசலில் திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார். அதன்பிறகு அருகிலிருந்தவர்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து போலீசார் உடனடியாக அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தும், தட்டியும், எழுப்பி சமாதானம் படுத்தியுள்ளனர். இதனையடுத்து கலாராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.