இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். இவர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். அதைத் தொடர்ந்தும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திவருகிறார்.
இதனிடையே தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே செஞ்சுரியனில் வரும் 26ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ போட்டியாக நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸும் இடம்பெற்றிருக்கிறார். அவருடன் அவரது பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்.இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்ட்டிற்கு, திங்கட்கிழமை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஆபத்தான நிலையில் ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், செவ்வாய் கிழமை நடைபெறும் பயிற்சியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ், 47 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெட் நியூசிலாந்து அணியின் சிறந்த ரக்பி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.