இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது
உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நேற்று மோதியது. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் அடித்தார்.
மேலும் அலெக்ஸ் கேரி 46 ரன்களும், மிட்சல் ஸ்டார்க் 29 ரன்களும் எடுத்தனர். 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர்.
இருவரும் விக்கெட் இழக்காமல் பொறுமையாக ஆடினர். அதன் பிறகு ஜேசன் ராய் அதிரடியில் இறங்கினார். இவர்களை ஆஸ்திரேலிய அணியால் வீழ்த்த முடியவில்லை. பின்னர் பேர்ஸ்டோ 39 ரன்களில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடி வந்த ஜேசன் ராய் 5 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜோ ரூட்டும், இயான் மோர்கனும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நேர்த்தியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் சிறப்பாக ஆடியதால் 32.1 ஓவரிலேயே இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. ஜோ ரூட் 49 ரன்களும், மோர்கன் 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகாலமாக உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றையும் மாற்றியுள்ளது. இங்கிலாந்து அணி வருகின்ற ஞாயிற்று கிழமை இறுதி போட்டியில் (14-ம் தேதி) நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.