Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நியூசி அணிக்கு எனது வருத்தம்” ஸ்டோக்ஸ், பட்லர் தான் இதற்கு காரணம் – கேப்டன் மோர்கன்..!!

கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். 

நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 7, ஓரளவு தாக்கு பிடித்த பேர்ஸ்டோ 36  கேப்டன் மோர்கன் 9 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 23.1 ஓவரில் 86/4 என்று தடுமாறியது.இதையடுத்து பென் ஸ்டோக்சும், ஜாஸ் பட்லரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பட்லர் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட இறுதி வரை போராடிய பென்ஸ்டோக்ஸ் சமன் செய்தார். இதனால் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சூப்பர் ஓவரில் அணிக்கு போராடிய பட்லரும், ஸ்டோக்ஸும் களமிறங்கினர். போல்ட் வீசிய அந்த ஓவரில் இருவரும் சேர்ந்து   15 ரன்கள் எடுத்தனர். பின்னர் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இந்த ஓவரில் நியூசி அதே 15 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட கப்தில் அடித்து விட்டு 2 ரன்கள் ஓட முயன்ற போது ரன் அவுட் ஆனார். போட்டி மீண்டும் டை ஆனது. ஆனால் ஐசிசி விதிப்படி முன்னதாக நடந்த இன்னிங்ஸில் அதிக பவுண்டரி அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. அரங்கம் அதிர வெற்றியை கொண்டாடினார்கள் இங்கிலாந்து வீரர்கள்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய மோர்கன், இந்த போட்டியில் பல சம்பவங்கள் நடந்து விட்டன. நான் வில்லியம்சன் மற்றும் அவரது அணிக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த போராட்டம் இரண்டு அணிகளுக்கும் தகுதியான ஓன்று. வில்லியம்சன் அவரது அணியை சிறப்பாக வழி நடத்தினார். இது பெரும் போராட்டமாக அமைந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ விழ இலக்கு மிக கடினமானது. பட்லரும் ஸ்டோக்சும் ஜோடி சேர்ந்து போட்டியை மாற்றிவிட்டார்கள். எனவே வெற்றி பெறுவோம் என நினைத்தேன். அது படியே நடந்து விட்டது. அதனால் தான் சூப்பர் ஓவரிலும் அவர்களையே அனுப்பினோம். கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என தெரிவித்தார்.

 

 

Categories

Tech |