உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி கோப்பையை வென்றது.
உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. கோப்பையை எந்த அணி வெல்லும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். ஜேசன் ராய் மேட் ஹென்றி வேகத்தில் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 7 ரன்னில் நடையை கட்டினார்.
ஓரளவு தாக்கு பிடித்த பேர்ஸ்டோவும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மோர்கனும் 9 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 23.1 ஓவரில் 86/4 என்று தடுமாறியது. இதையடுத்து பென் ஸ்டோக்சும், ஜாஸ் பட்லரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் அணியின் சரிவை நிலை நிறுத்தினர். பின் பட்லர் 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் வெளியேறினர். இருப்பினும் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடினார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் 2 பந்தில் ஸ்டோக்ஸ் ரன்கள் எடுக்கவில்லை. 3-வது பந்தை சிக்ஸர் அடித்தார். 4வது பந்தை அடித்து விட்டு 2 ரன்கள் ஓடும் போது கப்தில் வீசிய த்ரோ ரன் ஓடிய ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.
இதனால் சிக்ஸர் வழங்கப்பட்டது. இது தான் திருப்புமுனையாக அமைந்து விட்டது. இருப்பினும் அடுத்த 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட 2 ரன்களில் இங்கிலாந்து ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து சூப்பர் ஓவரில் பட்லரும், ஸ்டோக்ஸும் களமிறங்கினர். போல்ட் வீசிய அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இந்த ஓவரில் நீஷம் 3வது பந்தில் 1 சிக்ஸர் அடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அடுத்தடுத்து சிங்கிள் எடுக்க கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.
ஒட்டு மொத்த அரங்கமும் கண் இமைக்காமல் பார்த்த அந்த பந்தில் கப்தில் அடித்து விட்டு 2 ரன்கள் ஓட முயன்ற போது ரன் அவுட் ஆனார். சூப்பர் ஓவர் டை -ஆனது. இதனால் கோப்பையை இங்கிலாந்து வென்றது. உலககோப்பை ஐசிசி விதிப்படி சூப்பர் ஓவர் டை ஆனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் துள்ளி குதித்து மகிழ்ந்தனர். இங்கிலாந்து ரசிகர்களும் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர். இங்கிலாந்து 44 வருட கனவை நினைவாக்கியது. இதையடுத்து கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள் உற்சாக போஸ் கொடுத்து கொண்டாடினர்.