இங்கிலாந்து அரசு, ரஷ்ய நாட்டின் பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சின் சொத்துக்களை முடுக்குவதாக அறிவித்திருக்கிறது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சிற்கு உலகம் முழுக்க நிறைய சொத்துக்கள் இருக்கிறது. மேலும், இவர் இங்கிலாந்து நாட்டின் செல்சீ என்ற பிரபல கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா போர் தொடுத்தால் தங்கள் நாடுகளில் இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த நபர்களின் சொத்துக்களை முடக்குவோம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டன.
இதனிடையே இவர் செல்சீ அணியை விற்பனை செய்து அந்தப் பணத்தை உக்ரைன் நாட்டிற்கு அளிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கடந்த 2003 ஆம் வருடத்தில் செல்சீ அணியை 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் இருக்கும் பிற சொத்துக்களையும் அவர் விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் இருக்கும் ரோமன் உட்பட ரஷ்யாவைச் சேர்ந்த பணக்காரர்களின் அனைத்து சொத்துக்களும் முடக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும், தங்கள் நாட்டிற்குள் வருவதற்கும் ரோமன் ஆபரமோவிச்சிற்கு இங்கிலாந்து தடை விதித்திருக்கிறது.
எனினும் செல்சீ அணிக்கு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்திருக்கிறது. ரஷ்ய உரிமையாளரிடம் இருக்கும் செல்சீ அணியின் உரிமம் தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அது தொடர்பில் கால்பந்து வல்லுனர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.