இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர்.
போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய 2 வது பந்தில் பேர்ஸ்டோ 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜோ ரூட்டும், ஜேசன் ராயும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சினை சிறப்பாக எதிர் கொண்டு அரைசதம் விளாசினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. அதன் பின் 19வது ஃபெலுக்வயோ பந்து வீச்சில் ராய் 54 (53) ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ரபாடா வீசிய 20 வது ஓவரின் முதல் பந்தில் ரூட் 51 (59) ரன்களில் டுமினியிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து இயான் மோர்கனும், பென் ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் அற்புதமாக விளையாடி அரைசதம் கடந்தது. அதன் பின் மோர்கன் 57 (60) ரன்களில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36.5 ஓவரில் 247 ரன்களாக இருந்தது. இதையடுத்து வந்த பட்லர் 18, மொயின் அலி 3, வோக்ஸ் 13 என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரன்வேகம் குறைந்தது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி கடைசி கட்டத்தில் 79 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் பலெங்கெட் 9, ஜோப்ரா ஆர்ச்சர் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக நெகிடி 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர், ரபாடா ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 312 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கி விளையாடி வருகிறது.