இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளர்.
இந்நிலையில் இவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் அதில் முதல் போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். மேலும் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அவர் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை.
இந்நிலையில் நாளை தென் ஆப்பிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் களமிறங்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஒன்பதாவது நபர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் ஆகியோர் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்து அணிக்காக 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது நபர் என்ற சாதனையையும் அவர் படைக்கவுள்ளார். இதற்கு முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது 20ஆவது வயதிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடிவருகிறார். இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆண்டர்சன், 575 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.