குடியிருப்பு அருகில் மதுபான கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அந்த மதுபான கடையை காலி செய்யும்படி இடத்தின் உரிமையாளர் கேட்டதால் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து காட்பாடி-குடியாத்தம் ரோட்டில் பாண்டியன் நகர் போகும் வழியில் குடியிருப்புகள் பகுதியின் பக்கத்தில் மதுபான கடையை திறப்பதற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர்காலனி, பாண்டியன் நகர், சொர்ணலட்சுமி கார்டன் பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று இங்கு மதுபான கடையை திறக்க கூடாது கூடாது என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் வழியாக இருப்பதனால் பெண்கள், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். எனவே காவல்துறையினர் இந்த பகுதியில் மதுபான கடைக்கு எதிர்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இங்கு கடை வருவதற்கு வாய்ப்பு இருக்காது என்றும் பொதுமக்களிடம் உறுதியளித்தனர். மேலும் தாசில்தார் வத்சலாவும் இந்தப் பகுதியில் மதுபான கடை வேண்டாம் என உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுக்களை தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டரிடம் வழங்கியுள்ளனர்.