மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகைகளின் போது மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வு, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி போன்றோருடன் தலைமைச் செயலாளர் ரேணு சர்மா காணொளி காட்சி மூலமாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது அந்த மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் கொரோனா நிலைமை குறித்து தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கொரோனா நேர்மறை மற்றும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்த அரசு, பண்டிகை காலங்களில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் 7 முக்கிய பகுதிகள் கொரோனா ஹாட் ஸ்பாட்களுடன் புதிதாக இணைந்துள்ளது. மேலும் மாநிலத்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை எதிர்மறையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது