குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் புதுப்பேட்டை ரோடு காந்திநகர் 4-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் பல வருடங்களாகியும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சியை கண்டித்து காலிக்குடங்களுடன் புதுபெட்டை ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் பொதுமக்கள் நீங்கள் இதே பதில் தான் எப்போதும் சொல்கிறீர்கள் எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.