புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார். இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் சென்று வாங்க வேண்டிய நிலையுள்ளது.
இதையறிந்த, சுப்பையா நான்கு நாட்களுக்கு முன்பு, தனது சொந்த செலவில் ‘அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்கள், செய்தித்தாள்கள், வேலைவாய்ப்பு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றை, அந்தப் பெட்டிக்குள் வைத்து அவ்வூர் மக்களையும், மாணவர்களையும் அழைத்து ‘எடுத்து படியுங்கள். நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியும்’ என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த ’அறம்’ பெட்டியால் அப்பகுதியில் உள்ள அனைவரும் பயனடைந்து உள்ளதோடு சுப்பையாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.