மிசோரம் மாநிலத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பழக்கவழக்கங்களை பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். மகளிர் அணி தலைவியாக இருப்பதால் அனைத்து மாநிலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் வானதி ஸ்ரீனிவாசன். அதன்படி கடந்த 2 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மிசோரம் சென்றார். அங்குள்ள நிலைமை, மக்கள் வாழ்க்கை பற்றி அவர் கூறியது, வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம். வெறும் 8 மாவட்டங்கள் தான். மக்கள் தொகையும் 12 லட்சம் தான். மிசோ என்ற பழங்குடியின மக்கள் தான் அதிகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள எட்டு மாவட்டங்களில் 10 மொழிகள் பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளையும் எல்லாரும் புரிந்து கொள்கிறார்கள்.
அதனை தொடர்ந்து மிசோ பழங்குடியினர் 95% கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஆங்கிலம் சரளமாக பேசுகிறார்கள். மிசோ பழங்குடியினரின் திருமணம் முறை விசித்திரமாக இருக்கிறது. பழங்குடியின மக்களிடம் ஒரு வினோத வழக்கம் இருக்கிறது. ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்த பகுதியில் உள்ள வலிமை வாய்ந்த விலங்கு ஒன்றை வேட்டையாடி கொள்ளும் அளவுக்கு வீரம் மிக்கவனாக இருக்க வேண்டும். வீரம் தான் ஆணுக்கு திருமணத்திற்காக தகுதியை அளிக்கிறது. மிசோ பழங்குடியினர் மிதுன் என்ற விலங்கை வேட்டையாட வேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது. இப்போது அந்த வழக்கம் இல்லாததால் வேட்டையாடுவதற்கு பதிலாக மணப்பெண்ணுக்கு மணமகன் ரூ.420 கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.