மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு சுப்பிரமணிய சிவா தெருவில் எலக்ட்ரீசியன் பாலமுருகன் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் தறிப்பட்டறை தொழிலாளியாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருநிறைச்செல்வன் என்ற மகன் இருந்தார். இதில் திருநிறைச்செல்வன் நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநிறைச்செல்வன் திடீரென பெட்ரோலை குடித்துவிட்டார். இதனையடுத்து திருநிறைச்செல்வன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். அதன்பின் சில தினங்களில் திருநிறைச்செல்வன் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் திருநிறைச்செல்வனுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருநிறைச்செல்வன் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மகன் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் பெற்றோர் வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று மகனை தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியில் உள்ள கழிவறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மகன் திருநிறைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் பெற்றோர் மகன் திருநிறைச்செல்வனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திருநிறைச்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.