சாலையோரக் கடையில் இருந்த சில தலையாட்டி பொம்மைகளை மர்மநபர் உடைத்துவிட்டு மீதமிருக்கும் பொம்மைகளை திருடிச் சென்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெரு சிந்துநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சோழன் சிலை பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் தலையாட்டி பொம்மை கடை வைத்துள்ளார். மேலும் இவர் பெரியகோவில் பொம்மை வியாபாரிகள் தொழிற்சங்கம் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளில் இருக்கின்றார். இதனையடுத்து ஜெயகுமார் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு பொம்மைகளை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஜெயக்குமாரின் பொம்மை கடையில் இருந்த தலையாட்டி பொம்மைகளை காலால் உடைத்து விட்டு, 2 சிறிய சாக்கு மூட்டைகளில் தலையாட்டி பொம்மைகளை திருடி சென்று விட்டார். அதில் ஒரு சாக்கு மூட்டையிலிருந்த தலையாட்டி பொம்மைகளை மர்மநபர் குப்பைக்கிடங்கில் வீசி விட்டார். மேலும் மற்றொரு சாக்கு மூட்டைகளில் இருந்து பொம்மைகளை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார்.
இதனைதொடர்ந்து கடையை திறப்பதற்கு வந்த ஜெயக்குமார் பொம்மைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெயக்குமார் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சைக்கிளில் வரக்கூடிய ஒரு நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைக்கிளில் வந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உடைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பொம்மைகளின் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் ஆகும்.