பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சூரப்பள்ளி-பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியிலுள்ள புதரில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜலகண்டாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் இருந்ததனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை புதரில் வீசி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து அந்தப் பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி பெரியக்கா என்பதும், கூலி வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இவ்வாறு மர்ம நபர்களால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.