வட மாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ரோட்டின் அரசு மருத்துவமனை ரவுண்டானா மேம்பாலத்துக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு ஒரு வாலிபர் சென்றார். அந்த வாலிபர் திடீரென்று அங்குள்ள படிக்கட்டின் வழியாக ஏறி மாடிக்குச் சென்றார். இதனையடுத்து 2-வது மாடிக்கு சென்ற வாலிபர் அங்கிருந்து சன்சேடு சிலாப் மீது இறங்கினார். அதன்பின் அங்கிருந்த கற்களை எடுத்து வாலிபர் கீழ் நோக்கி வீசினார். இதனால் அங்கிருந்தவர்கள் மேலே பார்த்தபோது சிலாப் மீது நின்றிருந்த அந்த வாலிபர் கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சிப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அரசு மருத்துவமனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் இணைந்து அந்த வாலிபரை பாதுகாப்பாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்த ராஜூஹரி என்றும், இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் ராஜூஹரிக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் ராஜூஹரிக்கு தலையில் ஏற்கனவே காயம் ஏற்பட்டு இருந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தபோது சொந்த ஊருக்கு செல்வதற்காக இரயிலில் வந்த ராஜூஹரி ஈரோடு அருகில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் அவரை ரயில்வே காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று கொண்ட ராஜூஹரி திடீரென வெளியே வந்து கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆகவே ராஜூஹரி ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ராஜூஹரியை மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்தனர்.