அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிறது நவம்பர் 25ஆம் தேதி வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர், பட குழுவினர் என பலரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்துள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஹேமந்த் கூறியதாவது, ” இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்சன் என்றும் நடிகர் சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்றும் சொல்வேன். முதலில் இந்த படத்தின் கதையை சசிகுமாரிடம் கூறிய போது நீங்க சொன்ன மாதிரியே படம் எடுத்துட்டா வெற்றி தான் என்று அவர் உற்சாகப்படுத்தினார்.
லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்கிறீர்கள். ஆனால் லோக்கல் என்றால் நேட்டிவிட்டியை குறிக்கும். எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அவ்வளவு மதிப்பு இருக்கும். இப்போது நேட்டிவிட்டியை தவிர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் நடக்கிறது. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பதை குறிப்பதாகும். மேலும் இந்த படத்தின் மனிதர்களின் நம்பிக்கை, உறவு மற்றும் சிக்கல்கள் போன்றவற்றை கூறியிருக்கின்றோம். மொத்தத்தில் எமோஷனல் ஆக்சன் டிராமாவாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.