மண்பாண்ட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டர் வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மண்பாண்டம் செய்யும் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு முதல் மனைவி மல்லிகா, 2-வது மனைவி சசிகலா ஆகியோர் இருக்கின்றனர். இதில் முதல் மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகில் அர்ஜூனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அர்ஜுனனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அர்ஜுனனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலையே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று அர்ஜுனனின் சடலத்தை கைப்பற்றி இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ஜுனன் கொலை வழக்கில் தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்தின்படி ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.