அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த 3 பேரும் அதிகாரிகள் வருவதை பார்த்தவுடன் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு மாட்டை மட்டும் அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.