செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் வசிக்கும் சபரிவாசன், ராஜதுரை, அன்பழகன், ரவிச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செம்மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய மூன்று டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.