மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.கோவில்பத்து பகுதியில் பரமசிவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் விட்டிலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறியதால் வேகமாக சென்று அங்குள்ள பனை மரத்தில் மோதி விட்டது. இதில் பாலாஜி பலத்த காயமடைந்து மயங்கிக் கீழே கிடந்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.