மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் விவசாயியான பழனி ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறினால் கோகிலா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பழனி ராஜா உடன்குடிக்கு செல்வதற்கு தனது மோட்டார் சைக்கிளில் தாங்கை பண்டாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பழனிராஜா சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று அங்கு அமைந்துள்ள வேலி கம்பத்தின் மீது மோதி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனி ராஜா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு பழனி ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பழனி ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.