இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி பகுதியில் மணிவண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மணிவண்ணன் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிந்தாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய யோகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும், சிந்தாமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிந்தாமணி குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து மணிவண்ணன் சிந்தாமணி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அங்கு சிந்தாமணி சென்ற சில நாட்களிலேயே தந்தை மற்றும் தாயார் இறந்து விட்டதால் அவரின் உறவினர்கள் அவரை குழந்தையுடன் உனது கணவர் வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்று கூறியுள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிந்தாமணி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சிந்தாமணி தனது கணவரான மணிவண்ணனிடம் தனக்கு யாரும் இல்லை என்று மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட மணிவண்ணன் அதிர்ச்சியடைந்து குழந்தை மற்றும் மனைவியை அதே பகுதியில் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கும்படி கூறியிருக்கிறார். இதனால் சிந்தாமணி தனது குழந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிந்தாமணி வீட்டில் தனியாக இருந்ததால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தாமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து சிந்தாமணியின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிந்தாமணியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்த பிறகு அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.