கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு இடவசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ ஊழியர்கள் சாமிநாதனை ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் சாமிநாதன் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்கி தன்னை கவனித்துக்கொள்ள உறவினர்கள் யாருமில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து மலங்கன் பகுதியில் அமைந்துள்ள தைலமரக் காட்டில் ஒருவர் இறந்து கிடக்கின்றார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினருக்கு பிணமாக கிடக்கும் நபர் சாமிநாதன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சாமிநாதனின் உடலை மீட்டு மீனம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடையில் வைத்து எரித்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.