தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மீனாட்சி என்ற பெண் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்க முடியாமல் அங்கன்வாடி மையம் முன் அமர்ந்துள்ளார். இதனை பார்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீனாட்சியிடம் உங்களை எந்த அதிகாரி வேலைக்கு அனுப்பியது, சமைக்க வந்தீர்களா, உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது, உங்களை அழைத்துச் செல்ல உங்கள் கணவர் வருவாரா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்.
ஆனால் எதற்கும் பதில் கூற முடியாத அளவுக்கு மீனாட்சி போதை மயக்கத்தில் இருந்தார். இதுகுறித்து தகவலறிந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் ஜெயந்தி, தமிழ்ச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் அங்கன்வாடி மையம் முன்பே மதுபோதையில் மீனாட்சி மட்டையாகி படுத்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.