சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் பொதுமுடக்கம் காரணமாக சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை துறைமுகத்திற்கு ஏற்றுமதி- இறக்குமதிக்காக நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் வந்து செல்லும். இந்த கனரக வாகனங்கள் மாதவரம் மஞ்சும்பாக்கத்திலிருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகத்திற்கு செல்கின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலைகள் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் நெரிசல் காரணமாக இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வாகனங்களுக்கும் இச்சாலைகளில் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன.
எல்லாச் சாலைகளிலும் கன்டெய்னர் லாரிகள் நின்று கொண்டிருப்பதால் சாலையை சுத்தம் செய்ய முடியவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் கன்டைனர் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.