சென்னையில் ஏட்டாக வேலை பார்த்தவர் இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீதேவி உன்னிதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் அயனம் பாக்கம் பகுதியில் உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் டேவிட் ஆனந்தராஜ் என்பவர் ஸ்ரீதேவியின் நிலத்தை ஏற்கனவே அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஸ்ரீதேவி டேவிட் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் டேவிட் ஆனந்தராஜ் இரண்டு பேருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிந்து கொண்டு ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி மிரட்டி உள்ளார்.
அப்போது ஸ்ரீதேவிக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் தனது உறவினரான சைலேஷ் என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து டேவிட் ஆனந்தராஜ் மற்றும் உடனிருந்த இரண்டு பேரையும் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் இணைந்து பிடிக்க முயன்றபோது டேவிட் ஆனந்தராஜ் சிக்கி கொண்டார். ஆனால் மற்ற இருவரும் தப்பித்து ஓடி விட்டனர். அதன்பின் சைலேஷ் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டேவிட் ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு டேவிட் ஆனந்தராஜ் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் பல நாள் பணிக்குச் செல்லாத காரணத்தினால் காவல் நிலையத்தில் இருந்து அவரை பணியிடை நீக்கம் செய்து உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் டேவிட் ஆனந்தராஜ் மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.