கொரோனா நிதியும், 14 வகையான மளிகை பொருட்களும் கொடுத்ததில் முதன்மை இடமாக திருப்பத்தூர் விளங்குகின்றது.
கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் 2-வது தவணையாக கொடுக்கப்பட்டது. மேலும் கோதுமை மாவு, துவரம்பருப்பு, கடுகு, சீரகம் போன்ற பல்வேறு வகையான 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது. எனவே நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, ஒரு நாளைக்கு 200 நபர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது.
இந்த மாவட்டத்தில் வசிக்கும் 3 லட்சத்து 13 ஆயிரத்து 57 குடும்ப அட்டை வைத்திருந்தவர்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 640 நபர்களுக்கு நிவாரண தொகையும், மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலேயே இந்த மாவட்டம் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு முதலிடத்தை பிடித்தற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் போன்றவர்களை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டியுள்ளார்.