மூதாட்டி குடும்பத்துடன் நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தில் மூதாட்டி சரஸ்வதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி சரஸ்வதி கூறியபோது, எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் இருவரும் பேரணாம்பட்டு மெயின் ரோட்டில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக மளிகை, அடகுக்கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி எந்தவித அறிவிப்பும் இன்றி கோவில் நிர்வாகி பொக்லைன் எந்திரம் மூலம் திடீரென கடைகளை இடித்து விட்டனர் என்று மூதாட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 22-ம் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அப்போது காவல்துறையினர் எங்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று மூதாட்டி சரஸ்வதி காவல்துறையினரிடம்தெரிவித்துள்ளார்.