ரயில்வே மேம்பாலம் அமைக்க இருக்கும் இடங்களை சப்- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பகுதியில் மற்றும் சிவகாசி- விருதுநகர் சாலையில் திருத்தங்கள் பகுதியில் ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில்வேகேட் வழக்கமாக ஒரு நாளைக்கு 8 முறை அடைத்து திறக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக தினமும் 3 முறை சென்று, திரும்பும் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் இயக்கப்பட வில்லை. இதனால் தற்போது தினசரி 2 முறை மட்டும் சென்னை- செங்கோட்டை சிறப்பு ரயிலுக்காக திறந்து அடைக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் ரயில்களில் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கேட்கள் அடிக்கடி அடைக்கப்படுவதால் அந்தப் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் குறைந்தது 30 நிமிடம் வரை காத்திருந்து கடந்து செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
இதனை தவிர்ப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த 2 இடங்களிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்போது இருந்த விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தப் பணி அப்படியே கிடந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான பணிகளை தொடங்குவதற்கு முன்பாக மக்களிடம் கருத்து கேட்பது வழக்கமாக இருக்கின்றது.
அதன்படி நாளை 8-ம் தேதி காலையில் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற இருக்கின்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க இருக்கின்றனர். இந்நிலையில் திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க இருக்கும் பகுதிகளை சப்- கலெக்டர் பிரித்திவிராஜ், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.