பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்புக்கு தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காமராஜர் காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். எனவே கூடுதலாக உள்ள 6 அடி தண்ணீர் ராதாபுரம் பகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப்பகுதிக்கு நேரடி பாசனத்திற்கும், 52 குளங்கள் மூலம் விவசாயம் செய்யப்படும் 900 ஏக்கர் நிலப்பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்காக கால்வாயை காமராஜர் கொண்டு வந்தார் அப்பாவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ராதாபுரத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வது சட்ட புறம்பானது என்றும் விதிமீறல்கள் என்று மக்களிடையே பேச்சு ஏற்பட்டது.
ஆனால் பேச்சிப்பாறை அணையில் ராதாபுரத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கூடுதலாக அமைக்கப்பட்ட 6 அடி உயரத் தண்ணீரில் கால்பகுதி மட்டுமே ராதாபுரத்தில் கொண்டு செல்லப்படுவதால் எந்தவிதமான விதிமீறல்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அய்யா வைகுண்டசாமி அவதார தினமான மாசி 20-ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடுவதற்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிற மாநிலங்களை போன்று தமிழகத்தில் மேல்சபை கொண்டுவருவதற்கு சட்டசபையில் தான் முடிவு எடுக்க முடியும் என்றும் எம்.எல்.ஏ. அப்பாவு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் அன்புவனம் நிறுவனர் பால.பிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்ற பின் சாமிதோப்பு தலைமை பதி குருக்கள் பால.ஜனாதிபதி, பால யோகாதிபதி மற்றும் அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் ஆகியோர் வீடுகளுக்கும் எம்.எல்.ஏ. அப்பாவும் சென்று அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.