இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடர்பான கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றுக்களை விட மிகவும் ஆபத்தானது. இது ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை குறிவைத்து தாக்குவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையில் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 59 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வைரஸ் , இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு உள்ளது.
இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் மருத்துவர் பூனம் கேத்ரபால் தெரிவித்ததாவது “புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் நிலைமை மோசமாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அதனுடைய பாதிப்புகள் கண்டிப்பாக இருக்கும்.
இதன் தாக்கம் உலக அளவில் பல்வேறு வகைகளில் காணப்படுகிறது. தெற்கு ஆசிய பிராந்தியத்தை பொறுத்தவரையிலும் நாம் தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விடக்கூடாது. மேலும் கண்காணிப்பு, பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக அதிகரிக்க வேண்டும். ஒமிக்ரானின் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் தொற்று நோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதன் தாக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சற்று கடினமாகும். இதுகுறித்து உரிய தரவுகளை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஒமிக்ரான் தொடர்பாக பகுப்பாய்வு செய்ய ஆயிரக்கணக்கான நிபுணர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்” என்று அவர் கூறினார்