இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவிடும் செய்யும் பணியானது தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவில்களில் அளவீடு செய்யும் பணியானது தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தாலுகாவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 28 கோவில்களுக்கும் சேர்த்து 1,500 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றது. இதனை அளவிடும் செய்யும் பணி நடைபெற்றது. இதற்கு முன்பாக அந்தியூர் கெட்டி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிலங்களை அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சபர்மதி தலைமையில் தாசில்தார் பழனிச்சாமி, கோவில் செயல் அதிகாரி சரவணன், இந்துசமய துறை ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அரசு நியமனம் செய்த நில அளவையாளர் கார்த்திக், ஹரிஷ், அருண் போன்றோர் அளவீடு செய்தனர். அப்போது கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கணக்கீடு செய்யப்பட்டது. அதன்பின் அந்தியூரில் செல்லீஸ்வரர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், அழகராஜா பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பேட்டை பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில்களின் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.