தீ விபத்தை தடுப்பதற்காக கோவில் ஊழியருக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி கொடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தால் கோவில் கருவறை மேற்கூரை எரிந்து நாசமானது. இதுபோன்று சம்பவம் இனி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் உள்ள நாகராஜா கோவில் ஊழியருக்கு தீயணைப்பு துறை அதிகாரி இமானுவேல் பயிற்சி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கோவில் பிரகாரம், வளாகத்தில் தீ விபத்து நிகழ்ந்தால் அதனை எப்படித் தடுக்கலாம் என்றும் தீயணைப்பான்களை எந்த முறையில் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரி பயிற்சி கொடுத்துள்ளார். அதன்பின் கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தவர்களை காப்பாற்றுவது குறித்தும், சேலைகள் மற்றும் போர்வைகளை அவசரகால ஸ்ட்ரெச்சர்களாக பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளையும் செயல்விளக்கம் மூலம் தீயணைப்பு துறை அதிகாரி கொடுத்துள்ளார். இதில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி பெனட் தம்பி, தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.