ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகளின் பிரிவு என தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பழைய மருந்து அட்டைப் பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டைப் பெட்டிகள் இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்து கிளம்பிய புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார்டுகளில் உள்ள கொரோனா நோயாளிகள் 14 பேரை இடமாற்றம் செய்துள்ளனர்.
இதன் இடையில் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர். இவ்வாறு சரியான நேரத்தில் தீ அணைக்கபட்டதால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் மருத்துவமனை டீன் திருவாசகமணி, மருத்துவமனை சூப்பிரண்டு அருள் பிரகாஷ் மற்றும் மருத்துவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து கலெக்டர் கேட்டறிந்துள்ளார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் காவல்துறையினர் அவருடன் இருந்தனர். இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் எனதெரிவித்துள்ளனர்.