சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் காவல்துறையினர் கச்சனம் கடைத்தெருவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்களின் உடலில் மதுபாட்டில்கள் கட்டியிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் திருக்கிளர் பகுதியை சேர்ந்த ரமேஷ், ஆதிச்சபுரம் பகுதியை சேர்ந்த மனோகர் என்பது தெரியவந்தது. இவர்கள் தங்களது உடலில் மது பாட்டில்களை கட்டி கரைக்கால் பகுதியில் இருந்து நூதன முறையில் கடத்தி வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், மனோகர் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 48 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.