தமிழ்நாட்டு வாகனங்கள் கேரளா எல்லைக்குள் நுழைவதற்கு இ-பாஸ் முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை, செங்கவிளை, கோழிவிளை, ஊரம்பு, புலியூர்சாலை, பளுகள், செறியகொல்லா போன்ற 30க்கும் மேற்பட்ட இடங்களில் கேரள மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து களியக்காவிளை மீன்சந்தை, காய்கறி சந்தை, மளிகை கடை போன்ற இடங்களில் ஊரடங்கு அமலில் வந்ததால் பொதுமக்கள் கூட்டம் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குமரி கேரள எல்லையான களியக்காவிளையில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை காவல்துறையினர் கண்டித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.