பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (இபிஎப்ஓ) தற்போது அதனுடைய திட்ட விரிவாக்கத்தில் கவனம்செலுத்தி வருகிறது. விரைவில் வருங்கால வைப்புநிதி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உடல் நலம், ஓய்வூதியம், மகப்பேறு மற்றும் உடல் ஊனம் (அல்லது) இயலாமை குறித்த பலன்களை இபிஎப்ஓ அமைப்பு வழங்கக்கூடும். இபிஎப்ஓ அமைப்பானது அடிப்படை சமூகப் பாதுகாப்புத்துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. மேலும் EPFO சமூகப்பாதுகாப்புத் தளத்தின்(SPF) சரியான மேலாளராக இயலும் எனவும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்று ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது.
இபிஎப்ஓ திட்டங்களின் விரிவாக்கம் பற்றிய பூர்வாங்க விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. SPF என்பது தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட அடிப்படை சமூகபாதுகாப்பு உத்தரவாதங்களின் தொகுப்பு ஆகும். இது வறுமை மக்களுக்கு ஏற்படும் பலதரப்பட்ட பாதிப்புகள் மற்றும் சமூகவிலக்கலைத் தடுக்கும் (அல்லது) குறைக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பான வழிமுறைகளை வழங்குவதை உறுதிசெய்கிறது. அத்துடன் கூடுதலாக அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வருமான பாதுகாப்புக்கான அணுகல் குறித்த கருத்துகளும் இவற்றில் அடங்கும். வருங்கால வைப்புநிதியைத் தவிர்த்து இபிஎப்ஓ அதன் உறுப்பினர்களுக்கு சமூகப்பாதுகாப்பு பற்றிய மேலும் சில திட்டங்களை வழங்க முனைகிறது.
இதில் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கான உதவி, பெண்களுக்கான மகப்பேறு சலுகைகள் என பல்வேறு திட்டங்கள் அடங்கும். இபிஎப்ஓ அமைப்பு சுகாதார நலன்களுக்கான புது பரிமாணங்களையும் பரிசீலித்து வருகிறது. இபிஎப்ஓ இப்போது சுமார் 4.5 கோடி உறுப்பினர்களுக்கு இந்த நன்மைகளை கொண்டுவரும் முழு முனைப்போடு இருக்கிறது. இதற்குரிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இபிஎப்ஓ-ன் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 % பேர் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்திட்டங்களின் அறிமுகம் வாயிலாக அவர்கள் பல்வேறு நன்மைகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோசனைக்கான உறுதியான பணிகள் அடுத்தசில மாதங்களில் துவங்கும்.