கஞ்சா மற்றும் மாத்திரைகளை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் கஞ்சா கடத்தி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்களை சோதனை செய்துள்ளனர். அவ்வாறு காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதில் கஞ்சா மற்றும் சில வலி மாத்திரைகள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நஞ்சம்பட்டி பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் அவரிடமிருந்த வலி மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் இந்த மாத்திரைகளை எதற்காக பயன்படுத்துவார்கள் என்று விசாரித்தபோது அதற்கு அவர் அவற்றைத் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தி கொண்டால் போதை தரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் கஞ்சா மற்றும் மாத்திரையை கடத்திய குற்றத்திற்காக அந்த வாலிபரை கைது செய்து தப்பி சென்ற மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.