Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய மகன் அர்ஜுன் என்பதும், காட்டுமன்னார் கோவில் பகுதியில் இருக்கும் தனது அக்காள் வீட்டில் சிறுவன் தற்போது வசித்து வருகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த சிறுவன் தனது அக்கா வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு தனது சொந்த ஊரான வடலூருக்கு புறப்பட்டதாகவும் வழி தெரியாமல் இப்பகுதியில் நடந்து சென்றதாகவும் காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி விக்னேஷ் அந்த சிறுவனுக்கு உடனடியாக சாப்பாடு வாங்கி கொடுத்து காவல் நிலையத்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்றார். அதன்பின் சிறுவன் வழி தவறியது குறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு விக்னேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த வடலூர் காவல்துறையினர் மீன்சுருட்டி பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். இதனையடுத்து அந்த சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட காவல்துறையினர் நடந்த விபரங்களை கூறி அவர்களை வரவழைத்து உள்ளனர். அதன்பின் சிறுவனிடம் இதுபோன்று இனிமேல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு சிறுவனை மீட்டு தங்களிடம் ஒப்படைப்பதற்காக பெற்றோர்கள் காவல் அதிகாரி விக்னேஷ் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |