வீட்டின் சமையலறைக்குள் கிடந்த 7 அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்த குலாப்ஜான் என்பவர் கோழி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து சமையலறையில் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் அலுவலர் குப்புராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமையலறையில் இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்தனர். இதன் பின்னர் அந்தப் பாம்பை கோணிப்பையில் போட்டு கட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.