செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறப்பு நேரம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
தற்போது அதற்கான கால வரையறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, எட்டாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள இந்த ஊரடங்கில் முன்பை காட்டிலும் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
தமிழகத்திற்குள் மட்டும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்து முதற்கட்டமாக அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, உணவகங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட தனிக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.