அ.தி.மு.க வின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க ஆட்சியின் போது, பிரதமரை சந்தித்த சமயங்களிலும், கடிதங்கள் வாயிலாகவும் அ.தி.மு.க ஆட்சியின் கனவு திட்டமான கோதாவரி, காவிரி இணைப்பினை நிறைவேற்றுமாறு பல தடவை கோரிக்கை வைத்திருந்தேன்.
அதனையடுத்து, தற்போது இந்த மத்திய நிதி அறிக்கையில், நதிநீர் இணைப்பு திட்டங்களை உயிரூட்ட செய்த பிரதமருக்கு அ.தி.மு.க சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் என் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கக்கூடிய முக்கிய அம்சங்கள் நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மத்திய அரசாங்கத்தின் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. அதிமுக சார்பாக பிரதமருக்கும், சிறப்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சருக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.