சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை பெற்றார். அவர்க்கும் கொரோனா தொற்று இருப்பதால் பெங்களுருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலை ஆகி விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை எங்களது தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கின்றேன்.
மருத்துவர்களைப் பார்த்துவிட்டு சசிகலாவை எப்போது நாங்கள் அழைத்துச் செல்லலாம் என்பதை விவாதித்து, அவர்களின் ஆலோசனை பெற்று ஓய்வு தேவைப்படும் என்றால் ஓய்வு இங்கே எடுத்துக்கொண்டு சென்னைக்கு அழைத்து வருவோம். சசிகலாவின் வருகையை தமிழ்நாட்டில் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாகிகளும், தொண்டர்களும், மக்களும் அவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அவருக்கு ஒரு சிறப்பான வரவேற்பு இருக்கும்.
தமிழக அரசு மற்றும் அதிமுக ஜெயலலதாவின் நினைவிடம் திறந்து சசிகலா வருகையை சென்னையிலேயே கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் நான் அரசியல் பேசவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது அம்மாவின் இயக்கத்தை ( அதிமுக)வை மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு தான் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.