செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன். எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி அவர்களும், திரு.தங்கமணி அவர்களும் என்னிடம் வந்து, டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், திமுக – டி டி வி தினகரன் உங்களுடைய ஓட்டும் சேர்ந்தால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நிலையில் பதற்றத்தோடு என்னை வந்து சந்தித்தார்கள்.
அந்த நிலையில்தான் இவர்களும், சின்னமாவில் இருந்து பிரிந்து வந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் டிடிவி கொண்டு வந்து தீர்மானத்தை அவரோடு சேர்ந்து நான் ஆதரித்து இருந்தால், ஆட்சிக் கவிழ்ந்திருக்கும். அரசுக்கு நான் தந்த ஆதரவினால் தான் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அரசு 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டது தான் உண்மை அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், நான்கரை வருடம் அவர் செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை… என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.